×

கூலி உயர்வு கேட்டு 12 நாட்களாக வேலை நிறுத்தம் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி: நெசவாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்

திருத்தணி, பிப். 23: விசைத்தறி உரிமையாளர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இன்று பொதட்டூர்பேட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நெசவாளர்கள் அறிவித்துள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த, 12 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கடந்த வாரம், திருத்தணி கோட்டாட்சியர் தீபா தலைமையில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கம்பெனி உரிமையாளர்கள் இடையே சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், வருகின்ற 22ம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கோட்டாட்சியர் தீபா அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று காலை ஆர்டிஓ அலுவலகத்தில் கோட்டாட்சியர் தீபா தலைமையில் விசைத்தறி நெசவாளர்கள், கம்பெனி உரிமையாளர்கள் இடையே பேச்சு வார்த்தை துவங்கியது. பிற்பகல், 3 மணி வரை தொடர்ந்து இரண்டு தரப்பினருக்கும் இடையே கூலி உயர்வு குறித்து பல கட்டடங்கள் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கோட்டாட்சியர் தீபா கூட்டத்தை ஒத்திவைத்தார். மேலும் தேதி அறிவித்த பிறகு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவித்தார்.

இதனால், மனமுடைந்த, 200 பெண்கள் உள்பட, 600க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாலை, 6 மணியளவில் விசைத்தறி நெசவாளர்கள், புறப்பட்டு வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் இன்று 23ம் தேதி பொதட்டூர்பேட்டையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விசைத்தறி நெசவாளர்கள் தெரிவித்தனர். இந்த சமரச பேச்சு வார்த்தை கூட்டத்தில் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ், தொழிலாளர் நல வாரிய துணை ஆணையர் எட்வின், கைத்தறி உதவி இயக்குனர் இளங்கோவன், கைத்தறி அலுவலர் சுரேஷ், வட்டாட்சியர்கள் மதன், ராமன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post கூலி உயர்வு கேட்டு 12 நாட்களாக வேலை நிறுத்தம் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி: நெசவாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pothatturpet ,Tiruthani ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!